வைத்தியர்கள் உள்ளிட்ட உயர் திறனுடையவர்கள் நாட்டைவிட்டு செல்லும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களை தடுத்து நாட்டில் தக்கவைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க தவறினால், யார் அரசாங்கம் செய்தாலும் நாட்டை முன்கொண்டுசெல்ல முடியாமல்போகும். அதனால் வைத்தியர்களை நாட்டுக்குள் தக்க வைத்துக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நாட்டில் பாரி மருந்து தட்டுப்பாடு இருந்து வருகிறது. 218 வகையான மருந்துகள் களஞ்சியப்படுத்தப்படாமல் இருக்கின்றன. அத்தியாவசிய உயிர் பாதுகாப்பு 160 மருந்துப்பொருட்களும் களஞ்சியப்படுத்தப்படாமல் இருக்கின்றன. அதேபோன்று தேசிய வைத்தியசாலை அறிவித்தல் பலகையில், அங்கு வைத்திய பரிசோதனை செய்யப்படாத வைத்திய சோதனைகள் என ஒரு அறிவித்தல் போடப்பட்டிருக்கிறது. இந்த வைத்திய பரிசோதனைகளை செய்ய முடியாமல் இருப்பதே இதற்கு காரணமாகும்.
அதனால் இதுதொடர்பில் தேடிப்பார்த்து, அரசாங்கம் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். வைத்தியசாலைகளில் பாரியளவில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு இருந்து வருவதுபோன்று உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு இருந்து வருகிறது. வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாமல், சிகிச்சைக்கு வரும் நோயாளர்களை வெளியில் பரிசோதனை செய்து வருமாறு அனுப்புகிறார்கள். அரசாங்கம் வைத்திய துறைக்கு போதுமானளவு நிதி ஒதுக்காமல் இருப்பதே இதற்கு காரணமாகும்.
இதனால் எமது சுகாதாரத்துறை பாரிய வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மேலும் விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட வேறு துறைகளைச்சேர்ந்த நிபுணர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றனர். நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு முன்னர், வருடத்துக்கு 200 வைத்தியர்களே வெளிநாடு சென்றுள்ளனர். ஆனால் 2022, 2023 காலப்பகுதியில் 1800 பேர் வெளிநாடு சென்றுள்ளனர். இவ்வாறு நாட்டைவிட்டு செல்லும் விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் ஏனைய துறைசார நிபுணர்களை தக்கவைத்துக்கொள்ள சுகாதார அமைச்சின் கொள்கை என்ன?
இலங்கையில் சாதாரண வைத்தியர் ஒருவரின் அடிப்படைச்சம்பளம் 58ஆயிரத்தி 305 ரூபா. ஐக்கிய ராஜ்ஜியத்தில் சாதாரண வைத்தியர்களின் அடிப்படை சம்பளம் 17இலட்சத்தி 555 ரூபா. இலங்கையில் விசேட வைத்தியர் நிபுணர் ஒருவரின் அடிப்படைச் சம்பளம் 88 ஆயிரம் ரூபா ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் 33 இலட்சம் ரூபா. இவ்வாறு இருக்கையில் இவர்கள், எமது நாட்டில் தங்கி இருப்பார்களா? அதேபோன்று வைத்தியர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களின் நிலைமைகள் மிகவும் மோசமானதாகும்.
அதேபோன்று வைத்தியர்களின் கொடுப்பனவுகள்,அவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை அதிகரிக்க ஏன் எங்களுக்கு முடியாது? அதேபோன்று வைத்தியர்களுக்கு அரசாங்கத்தின் வாகன அனுமதி பத்திர ஏன் வழங்க முடியாது? எங்களுக்கு வாகன அனுமதி பத்திரம் தேவையில்லை. நாட்டில் இருக்கும் உயர் தொழில் வல்லுனர்களுக்கு கொடுக்க நடவடிக்கை எடுங்கள் என்றார்.