களனிப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடத்தைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு, உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு புதிய, மிகவும் பயனுள்ள மருந்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
இந்த பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் அசித டி சில்வா கருத்துப்படி, இந்த மருந்தானது பொதுவாகப் பயன்படுத்தப்படும் மூன்று வெவ்வேறு மருந்துகளின் கலவையாக, ஒற்றை மாத்திரையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நோயாளிகள் ஒரு நாளைக்கு ஒரே ஒரு மாத்திரையை மட்டும் எடுத்துக்கொண்டால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு தசாப்த கால ஆராய்ச்சிக்குப் பின்னர் உருவான இந்த மருந்து, மருத்துவப் பரிசோதனைகளில் கலந்துகொண்ட 88% நோயாளிகளின் இரத்த அழுத்தத்தை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதன் முக்கியத்துவம் கருதி, இந்த மருந்து ஜூன் மாதத்தில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்டதுடன், செப்டம்பரில் உலக சுகாதார அமைப்பின் (WHO) அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த மாத்திரையானது, உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நோயாளிகளுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 60% வரை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.