இஸ்ரேல் – காசா போரில் பயன்படுத்தப்படும் அமெரிக்க ஆயுதங்களில், கனடாவில் தயாரிக்கப்பட்ட ராணுவ உதிரிப்பாகங்கள் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து கனடா அரசு ஒரு விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் புகாரைத் தொடர்ந்து, வெளியுறவுத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கனடா அரசு நேரடியாக இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யவில்லை என்றாலும், அமெரிக்கா வழியாக இவை இஸ்ரேலைச் சென்றடைவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, ராணுவப் பொருட்களை அமெரிக்காவிற்கு அனுப்பத் தனித்தனியாக அனுமதி (Permit) பெற வேண்டியதில்லை.
இஸ்ரேல் பயன்படுத்தும் நவீன எஃப்-35 (F-35) போர் விமானங்களில் கனடாவில் தயாரிக்கப்பட்ட சென்சார்கள் மற்றும் மின்னணு பாகங்கள் பயன்படுத்தப்படுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
சர்வதேச ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தின்படி, மனித உரிமைகளை மீறும் வகையில் போர் நடைபெறும் இடங்களுக்கு ஆயுதங்களை அனுப்பக் கனடாவுக்குத் தடை உள்ளமை குறிப்பிடத்தக்கது.