சபாநாயகருக்கு எதிராகவும் இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இரண்டு வீடுகளை பாவிப்பதாகவும், அதற்குரிய வாடகை பெறுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆகவே சபாநாயகர் அக்கிராசனத்தில் அமரமுடியாது என புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை கடுமையாக சாடினார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (22) நடைபெற்ற அமர்வின்போது, ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்துள்ளேன்.
உங்களுக்கு (சபாநாயகரை நோக்கி) எதிராகவும் இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இரண்டு வீடுகளை பாவிப்பதாகவும், அதற்குரிய வாடகை பெறுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆகவே உங்களுக்கு அக்கிராசனத்தில் அமரமுடியாது. எனது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை பற்றி பேசுவதற்கு இடமளியுங்கள் என்றார்.
சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, இது சிறப்புரிமை மீறல் பிரச்சினையில்லை என்றார்.
சாமர சம்பத் இதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் ஒழுங்குப்பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், நீங்கள் (சபாநாயகரை நோக்கி) எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைப்பதற்கு இடமளிப்பதில்லை.
சிறப்புரிமை மீறல் பிரச்சினை முன்வைத்தால் அது பற்றி ஆராய்வதற்கு சிறப்புரிமை மீறல் தொடர்பான குழு உள்ளது. நீங்கள் அவ்வாறு செயற்படுவதாக இருந்தால் நிலையியல் கட்டளையில் இருந்து சிறப்புரிமை மீறல் தொடர்பான குழுவை நீக்குங்கள். உங்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு காணப்படுவதாலா, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைக்க இடமளிக்க மறுக்கின்றீர்கள்.என்று கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன,இதில் எவ்வித ஒழுங்குப்பிரச்சினையும் இல்லை. சாமர சம்பத் முன்வைத்த சிறப்புரிமை மீறல் பிரச்சினையில், அவரது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளமை முறையாக குறிப்பிடப்படவில்லை. அவற்றை தெளிவாக குறிப்பிட்டு சிறப்புரிமை மீறல் பிரச்சினையை மீண்டும் சமர்ப்பிக்கலாம் என்றார்.