ஏப்ரலில் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என முதலீட்டாளர்களை அச்சப்படவைக்க அரசியல்வாதிகள் முயல்கின்றனர் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரவித்துள்ளார்.
அத்தோடு, கடந்த வருடத்திலும் இவ்வாறு பல்வேறு மாதங்களை குறிப்பிட்டனர் ஆனால் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
அநுராதபுரம், கொரகஹவெவ வடமத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று (27) பிற்பகல் நடைபெற்ற ‘ஹிமிகம’ பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசிய திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது பொருளாதார பயணம் சுமூகமாக அமைந்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்வது தொடர்பில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
பொருளாதாரம் தொடர்பில் அவநம்பிக்கை இருக்கும் நாட்டில் எந்த முதலீட்டாளரும் முதலிட முன்வருவதில்லை.
சாதாரண மக்களுக்கு பொருளாதர நன்மைகள் சென்றடைய வேண்டும். இந்த வருடம் 31 000 வீடுகளை நிர்மாணிக்க இருக்கிறோம். வீடற்றவர்களுக்கு வீடு வழங்க வேண்டும்.
டித்வா சூறாவளி காரணமாக மேலும் 20 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க வேண்டியுள்ளது. 6000 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. சுமார் 15 ஆயிரம் வீடுகள் மீளக் குடியேற உகந்தவை அல்ல என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மொத்தமாக 51 ஆயிரம் வீடுகளை கட்ட வேண்டியுள்ளது. பாதைகளை அமைப்பதற்காக மாகாண சபைகளுக்கு 15000 மில்லியனுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
கிராமிய வீதிகள் அதன் ஊடாக நிர்மாணிக்கப்படும். கிராமிய வீதிகளை நிர்மாணிக்க, வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு 25 000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.