மத்திய கிழக்கு பிராந்திய வலயத்தில் போர் பதற்றம் நிலவி வரும் பின்னணியில் அந்தப் பிராந்தியத்தில் உள்ள இலங்கையர்களின் நிலைமை குறித்து கண்டறியும் நோக்கில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய கிழக்கிற்கு விஜயம் செய்ய உள்ளனர்.
இந்த விஜயத்திற்கு மத்திய கிழக்கு பிராந்திய வலய இந்த நாடுகளில் காணப்படும் இலங்கை தூதரகங்ளின் ஒத்துழைப்பை வழங்குமாறு எதிர்க்கட்சி தலைவர் கோரியுள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு இந்த கோரிக்கை தொடர்பில் எழுத்து மூலம் அவர் அறிவித்துள்ளார்.
பைசர் முஸ்தபா, அஜித் பெரேரா, சதுர கலப்பத்தி உள்ளிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சொந்த செலவில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
டுபாய்,பஹ்ரைன்,அபுதாபி,சவுதி அரேபியா,கட்டார், சார்ஜா உள்ளிட்ட பல இடங்களுக்கு இந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விஜயம் செய்ய உள்ளனர்.
போர் பதற்றத்திற்கு மத்தியில் அங்கு வாழ்ந்து வரும் இலங்கையர்களின் நிலைமைகளை நேரில் கண்டறியும் நோக்கில் இந்த விஜயம் அமையப்பெற்றுள்ளது என தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.