நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகளை எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்போவதில்லை என இறக்குமதியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு உறுதியளித்துள்ளன.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் இன்று (23) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது.
கலந்துரையாடலின் முக்கிய அம்சங்கள்:
விலை உறுதிப்பாடு: உலகளாவிய போர்ச் சூழல் மற்றும் உற்பத்திச் செலவு அதிகரிப்பு போன்ற சவால்களுக்கு மத்தியிலும், எதிர்வரும் புத்தாண்டு பருவகாலம் முடியும் வரை நுகர்வோருக்குச் சுமையளிக்காத வகையில் விலைகளை உயர்த்தாதிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கையிருப்பு உறுதி: அடுத்த மூன்று மாத காலத்திற்குத் தேவையான இறக்குமதி செய்யப்பட்ட பால்மா மற்றும் கோதுமை மா (பிரீமா மற்றும் செரண்டிப்) கையிருப்பில் உள்ளதாக நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
வினியோக சவால்கள்: எரிபொருள் ஒதுக்கீடு (Quota) காரணமாக விநியோக நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நிறுவனங்கள் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்றன.
எரிபொருள் தேவையை முறைப்படுத்துதல்: உணவு விநியோகத் துறையில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து சேவையாளர்களின் எரிபொருள் தேவையை அடையாள காண்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட தரவு சேகரிப்புத் திட்டத்தில் பதிவு செய்யுமாறு அமைச்சர் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தினார்.