இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்கத்துடன் இணைந்து ஸ்ரீலங்கன் ஸ்போர்ட்ஸ் ரிவி ஏற்பாடு செய்துள்ள 20 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான லைவ்போய் போல் ப்ளாஸ்டர் கிண்ண கால்பந்தாட்ட கால் இறுதிப் போட்டிகள் கொம்பனித் தெரு சிட்டி லீக் மைதானத்தில் இன்று புதன்கிழமை நடைபெறவுள்ளன.
இன்று காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது கால் இறுதிப் போட்டியில் தோல்வி அடையாத கிளிநொச்சி, வட்டக்கச்சி மத்திய கல்லூரி அணியும் மருதானை ஸாஹிரா கல்லூரி அணியும் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.
கிளிநொச்சியிலிருந்து மாவனெல்லை, நீர்கொழும்பு ஆகிய இடங்களுக்கு நெடுந்தூரம், நெடுநேரம் பயணித்து, பயணக் களைப்புடன் விளையாடிய போதிலும் எதிரணிகளுக்கு பலத்த சவால் விடுத்து விளையாடிய வட்டக்கச்சி மத்திய கல்லூரி அணி இன்று பலம்வாய்ந்த ஸாஹிரா கல்லூரி அணிக்கு பலத்த சவாலாக விளங்கி அதிர்ச்சி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதூரியா மத்திய கல்லூரி, கொழும்பு ஹமீத் அல் ஹுசெய்னி கல்லூரி ஆகியவற்றுடனான டி குழு போட்டிகளில் அதீத ஆற்றல்களை வெளிப்படுத்திய வட்டக்கச்சி மத்திய கல்லூரி அணி அப் போட்டிகளை 1 – 1 என வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.
குறிப்பாக மிகவும் பலம்வாய்ந்த ஹமீத் அல் ஹுசெய்னி கல்லூரி அணியுடனான போட்டியில் வட்டக்கச்சி மத்திய கல்லூரி அணி வீரர்கள் வெளிப்படுத்திய திறமை அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.
தனது கடைசிப் போட்டியில் நீர்கொழும்பு அல் பலாஹ் கல்லூரியை 3 – 0 என வட்டக்கச்சி மத்திய கல்லூரி இலகுவாக வெற்றிகொண்டிருந்தது.
இதேவேளை ஏ குழுவில் இடம்பெற்ற மருதானை ஸாஹிரா கல்லூரி தான் விளையாடிய 3 போட்டிகளிலும் தாருஸ்ஸலாம் கல்லூரி (2 – 1), கிங்ஸ்வூட் கல்லூரி (6 – 1), கம்பளை ஸாஹிரா கல்லூரி (2 – 1) ஆகிய அணிகளை வெற்றிகொண்டு கால் இறுதிக்கு முன்னேறியது.
இந்த இரண்டு அணிகளினதும் பெறுபேறுகளை ஒப்பிடும்போது ஸாஹிராவுக்கு சாதகமான முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டக்கச்சி மத்திய கல்லூரி: பி. துஷ்யந்தன், ஏ. குறியாளன், ஜே. கிருஜன், எஸ். ஜினுசன், எஸ். டினுஷன், எல். சாதுரியன், வி. அருள்விஜய், கே. தமிழ்வாணன், ஜே. கனாலரன், பி. நிகேதன், ரி. கரிசன், பி. மிதுசிகன், எஸ். மாதுளன், வை. சதுர்சன், ஆர். கலைப்பிரியன், ஆர். தென்னிலவன், எஸ். பரத், ஐ. பிருந்தன், எஸ். சஞ்சய், ஐ. யதுஷன், ஆர். டெனிசன். பயிற்றுநர்: எஸ். ஜெயகுமார்.
ஸாஹிரா: எம்.ஆர். மொஹமத், எம். அப்துல்லா, எம். பாரிக், அஹமத் அலி, எம். சுஹெய்ப், பாரிக் அஹமத், எம். கதீம், எம். ஸெய்த், ரி. ரிஷாத், எம். பாத்திஹ், எம்.எச். அப்துல்லா, எம். முஸ்தாக், ஆர்.ஏ. யஹியா, அப்துல் அஸீஸ், எம்.என். நிப்ராஸ், எஸ். உஸ்மான், எம். ஹுமர், ஹாதீம் அஹமத், எம். முவாஸ், ஆதில் ஸஹீர், எம். ஹிப்னி, எம்.எச். நிம்னாஸ், எம்.எச். ஏ. அஹமத். பயிற்றுநர்: இம்ரான் மொஹமத்.