கொழும்பு – இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) கீழ் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை (Air defence guns) தரம் உயர்த்துவது, இலங்கையின் முக்கிய சொத்துக்களைப் பாதுகாக்கும் வான் பாதுகாப்பு கட்டமைப்பை கணிசமாக வலுப்படுத்தும்.
இந்திய அரசாங்கத்தின் மானியத்தின் கீழ், இலங்கை விமானப்படையின் ஆறு L70 துப்பாக்கிகளை தரம் உயர்த்துவதற்காக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் முன்னதாக இந்தியாவிடம் இருந்து இலங்கை விமானப்படைக்கு வழங்கப்பட்டவையாகும்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் தற்போதைய இலங்கை விஜயத்தின் போது மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கல்லூரி (NDC) மற்றும் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கல்லூரி ஆகியவற்றிற்கு இடையிலான கல்வி ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கு வசதி செய்வதுடன், இரு சகோதர நிறுவனங்களுக்கும் இடையிலான கல்வித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய அடியாகும்.
அதேவேளை, இந்தியாவின் தேசிய கெடட் படைப்பிரிவு (NCC) மற்றும் இலங்கையின் NCC ஆகியவற்றிற்கு இடையிலான ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான NCC இளைஞர் பரிமாற்றத் திட்டத்தை (Youth Exchange Programme) முறைப்படுத்துகிறது. இந்த பரிமாற்றத் திட்டம், ஒவ்வொரு ஆண்டும் பல நாடுகளைச் சேர்ந்த NCC கெடட்கள் புதுடெல்லிக்கு பயணம் செய்து NCC நிகழ்வுகளில் பங்கேற்க ஒரு மதிப்புமிக்க வாய்ப்பை வழங்குகிறது.