வடகிழக்கு பருவமழை எதிரொலியாக இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் பாம்பன் தூக்கு பாலம் வழியாக தெற்கு கடல் பகுதிக்கு நேற்று(07.11.2025) காலை இடமாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் வடக்கு பாக் ஜலசந்தி கடல் பகுதியில் புயல் உருவாகி வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் வடக்கு கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த இந்திய கடலோர காவல்படை ரோந்து கப்பல் பாதுகாப்பாக நிறுத்துவதற்காக பாம்பன் புதிய மற்றும் பழைய ரயில் பாலங்கள் திறக்கப்பட்டு அவ்வழியாக கடந்து தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மாற்றப்பட்டுள்ளது.
வட கிழக்கு பருவ மழை முடியும் வரை இந்திய கடலோர காவல்படை ரோந்து கப்பல் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும் என இந்திய கடலோர காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.