இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்கும் தீர்மானத்தை வரவேற்று, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்க்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
இந்தியா–பாகிஸ்தான் மோதல் திட்டமிட்டபடி நடைபெறவுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இணை நடத்துனர் என்ற வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) மற்றும் இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் இலங்கை நன்றியினைத் தெரிவித்துள்ளது.
1996 உலகக் கிண்ணத்தின் போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கிய ஆதரவை மறக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் அரசு தனது கிரிக்கெட் அணிக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த தீர்மானம் கிரிக்கெட் விளையாட்டின் மரியாதையையும், உலகளாவிய விளையாட்டுத் தொடர்புகளையும் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.