சென்னை:
ஆளும் தவெக அரசு, மக்களைப் பற்றிச் சிந்திக்காமல் தேவையற்ற இடைத்தேர்தலைத் திணித்துள்ளதாகவும், நிதி இல்லை என்று கூறிக் கொண்டே புதிய சட்டமன்றம் அமைக்க மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க முயல்வதாகவும் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி எம்.பி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் டி. ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த பின், செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி முன்வைத்த முக்கியக் குற்றச்சாட்டுகள்:
-
குதிரை பேரமும் தேவையற்ற தேர்தலும்: ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை ராஜினாமா செய்ய வைத்து, குதிரை பேரத்தின் மூலம் மீண்டும் ஒரு தேவையற்ற தேர்தலை (இடைத்தேர்தல்) மக்கள் மீது தவெக அரசு திணித்துள்ளது. மக்களின் வரிப்பணத்தைக் கேடு செய்யும் இந்தச் செயல்தான் அவர்கள் கூறும் “நேர்மையான அரசியலா?” எனக் கேள்வி எழுப்பினார்.
-
சட்டம் – ஒழுங்கு சீர்கேடு: தமிழ்நாடு முழுவதும் கொலை, குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் இதற்குச் சட்டமன்றத்தில் உரிய பதில் அளிக்காமல், சினிமாவில் பேசுவதுபோல் ‘பஞ்ச் டயலாக்’ பேசிப் பொய்களை அரங்கேற்றுவதாகக் குற்றம்சாட்டினார்.
-
புதிய சட்டமன்றம் தேவையா?: தவெக அரசு இருக்கின்ற சட்டமன்றத்தில் ஆட்சியை முதலில் ஒழுங்காக நடத்தட்டும்; அதன்பிறகு புதிய சட்டமன்றத்தைப் பற்றிச் சிந்திக்கலாம். இடமாற்றம் செய்ய வேண்டும் என்றாலும், கலைஞர் ஏற்கனவே கட்டிய சட்டமன்றக் கட்டடம் (தற்போதைய ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை) உள்ளது; அதையே பயன்படுத்தலாம் என்றார்.
-
வரிப்பணம் வீணடிப்பு: எதைக் கேட்டாலும் ‘நிதி இல்லை’ என்று கூறும் ஆளுங்கட்சியினர், மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதற்கான அனைத்து வழிகளையும் கண்டுபிடித்து வருவதாகக் கூறிய கனிமொழி, இனிமேலாவது மக்கள் பணத்தை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
Hashtags:
#KanimozhiMP #DMK #TVKGovt #ByElections #NewSecretariat #ChiefMinisterVijay #TNPolitics #TamilNaduNews #ChennaiNews #TamilNews #BreakingNewsTamil