‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ எனும் திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.
அறிமுக இயக்குநர் தினேஷ் லக்ஷ்மணன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தீயவர் குலை நடுங்க’ எனும் திரைப்படத்தில் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், அபிராமி வெங்கடாசலம், பிரவீண் ராஜா, லோகு, வேல. ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், பிரியதர்ஷினி, பேபி அனிகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் ஆசீவகன் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி எஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள் குமார் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் 21 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்த பிரத்யேக நிகழ்வில் பட குழுவினருடன் இயக்குநர்கள் எஸ். ஆர். பிரபாகரன், அஜயன் பாலா, தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன் , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளரான வன்னியரசு உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” படத்தின் கதை எம்முடைய எளிய மனிதர்களின் நாளாந்த வாழ்வில் எளிதாக கடந்து செல்லக்கூடிய விடயமாக இருக்கும். இதனை யாரும் முகம் சுழிக்காத வகையில் நேர்த்தியான படைப்பாக உருவாக்கி இருக்கிறோம். இன்றைய காலகட்டத்தில் அனைத்து தரப்பினரிடத்திலும் பகிர்ந்து கொள்ள வேண்டிய முக்கியமான விடயத்தையும் இதில் இடம்பெறச் செய்திருக்கிறோம்” என்றார்.