இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த முன் அறிவித்தல்களை அலட்சியப்படுத்தி அரசாங்கம் மக்களின் உயிரை பலியெடுத்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (05) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டுள்ள ஏனையவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இந்த அனர்த்தத்தின் பாதிப்பை குறைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
இலங்கை இவ்வாறான பேரிடரை எதிர்கொள்ள போவதாக சர்வதேச செய்தி நிறுவனங்களும் முன்கூட்டியதாகவே அறிக்கை வெளியிட்டுள்ளன. அதேபோன்று சர்வதேச காலநிலை மாநாடுகளிலும் இலங்கை பாரியதொரு காலநிலை அனர்த்தத்தை எதிர்கொள்ள போவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மாநாடுகளில் அரசாங்கத்தின் பிரநிதிகளும் கலந்துக் கொண்டுள்ளார்கள். ஆனால் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சொத்து இழப்புக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த முன் அறிவித்தல்களை அலட்சியப்படுத்தி அரசாங்கம் மக்களின் உயிரை பலியெடுத்துள்ளது.
முழு நாட்டையும் இயற்கை அனர்த்தங்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த 28 ஆம் திகதி அரச விடுமுறை என்று அறிவிப்பு வெளியானது. இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு எவராலும் உதவி செய்ய முடியும். அனர்த்தத்துக்கு முன்னரான காலப்பகுதியிலும் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.அனர்த்தத்துக்கு பின்னரும் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.
அனர்த்தத்தின் போது ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட தம்மவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.இது இலங்கையர்களின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியுள்ளது.இதற்கு உயரிய கௌரவத்தை வழங்குகிறோம் என்றார்.