ருண்ட ஆற்றல், கறுப்பு ஓட்டைகள் மற்றும் அண்டத்தின் பிற அறியப்படாத இரகசியங்களை ஆராயும் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்துடன், நாசாவின் அதிநவீன ‘நான்சி கிரேஸ் ரோமன்’ விண்வெளித் தொலைநோக்கி வெற்றிகரமாக விண்வெளியில் ஏவப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் ரொக்கெட் மூலம் ஞாயிற்றுக்கிழமை இத்தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட்டது.
ரோமன் தொலைநோக்கியானது புகழ்பெற்ற ஹப்பிள் மற்றும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கிகளை விட 100 மடங்கு அதிக பரப்பளவை ஒரே நேரத்தில் பார்க்கும் அதிநவீன அகச்சிவப்பு கமராக்களைக் கொண்டுள்ளது.
பூமியிலிருந்து சுமார் 10 இலட்சம் மைல்கள் (1.6 மில்லியன் கி.மீ) தொலைவில் உள்ள தனது இலக்கை அடைய இது 100 நாட்கள் பயணிக்கவுள்ளது.
சூரிய குடும்பத்திற்கு அப்பால் உள்ள பல்லாயிரக்கணக்கான (சுமார் 1,00,000 வரை) புதிய கிரகங்களை இத்தொலைநோக்கி கண்டறியும் என நாசா விஞ்ஞானி நிக்கி பாக்ஸ் தெரிவித்துள்ளார். “விண்வெளியில் நாம் தனித்து வாழ்கிறோமா?” என்ற கேள்விக்கான விடையை நோக்கி இது நம்மை அழைத்துச் செல்லும்.
பிரபஞ்சத்தின் 95 சதவீதமான பகுதியைக் கொண்டுள்ள, ஆனால் இன்னும் புதிராகவே இருக்கும் இருண்ட ஆற்றல் மற்றும் இருண்ட பொருளின் தன்மையை ஆராய்ந்து, அண்டத்தின் பரிணாம வளர்ச்சி குறித்த வரைபடங்களை உருவாக்க இது உதவும்.
1960-களில் நாசாவின் முதல் பெண் தலைமை வானியலாளராகப் பணியாற்றி, ஹப்பிள் தொலைநோக்கி உருவாக முக்கிய பங்காற்றிய இயற்பியலாளர் நான்சி கிரேஸ் ரோமனின் நினைவாக இத்தொலைநோக்கிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 5 ஆண்டுகள் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இத்தொலைநோக்கி, 10 ஆண்டுகள் வரை தனது ஆராய்ச்சிப் பணிகளைத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொலைநோக்கியின் வெற்றிக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விண்வெளி நிறுவனத்திற்குத் தொலைபேசி வழியே தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.