நியூஸிலாந்துக்கு எதிராக கிறைஸ்ட்சேர்ச் ஹெக்லே விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் கடைசி நாளன்று ஜஸ்டின் க்றீவ்ஸ் குவித்த இரட்டைச் சதத்தின் உதவியுடன் அப் போட்டியை மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.
ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது மேற்கிந்தியத் தீவுகள் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 457 ஓட்டங்களைக் குவித்திருந்தது.
இதன் மூலம் தனது 6ஆவது டெஸ்டில் முதலாவது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகளை மேற்கிந்தியத் தீவுகள் பெற்றுக்கொண்டது.
போட்டியின் கடைசி நாளான நேற்று மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிக்கு மேலும் 319 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன் நியூஸிலாந்தின் வெற்றிக்கு 6 விக்கெட்கள் வீழ்த்தப்படவிருந்தது.
இந் நிலையில் இந்தப் போட்டியில் பெரும்பாலும் நியூஸிலாந்து வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஜஸ்டின் க்றீவ்ஸ் ஒன்பது மணித்தியாலங்களுக்கு மேல் துடுப்பெடுத்தாடி 388 பந்துகளை எதிர்கொண்டு 19 பவுண்ட்றிகள் அடங்கலாக ஆட்டம் இழக்காமல் 202 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைவதை உறுதிசெய்தார்.
மேலும் நியூஸிலாந்து மண்ணில் நான்காவது இன்னிங்ஸில் இரட்டைச் சதம் குவித்த முதலாவது வெளிநாட்டவர் என்ற பெருமையை ஜஸ்டின் க்றீவ்ஸ் பெற்றுக்கொண்டார்.
அவர் தனது முதலாவது இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்ததும் போட்டியை முடித்துக்கொள்ள இரண்டு அணியினரும் தீர்மானித்தனர்.
போட்டியின் மூன்றாம் நாளான நேற்றைய தினம் 4 விக்கெட் இழப்புக்கு 74 ஓட்டங்களிலிருந்து ஜோடியாகத் துடுப்பெடுத்தாடிய ஷாய் ஹோப், ஜஸ்டின் க்றீவ்ஸ் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 196 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறப்பான நிலையில் இட்டனர்.
ஷாய் ஹோப் 5 மணித்தியாலங்களுக்கு மேல் துடுப்பெடுத்தாடி 234 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 140 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். (268 – 5 விக்.)
மொத்த எண்ணிக்கை 277 ஓட்டங்களாக இருந்தபோது டெவின் இம்லக் (4) ஆட்டம் இழந்ததும் நியூஸிலாந்து வெற்றிபெற்றுவிடும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கத் தொடங்கியது.
ஆனால், ஜஸ்டின் க்றீவ்ஸ், கெமர் ரோச் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 180 ஓட்டங்களைப் பகிர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் தோல்வி அடைவதைத் தவிர்த்தனர்.
இந்த இணைப்பாட்டமானது டெஸ்ட் போட்டி ஒன்றில் நான்காவது இன்னிங்ஸில் பதிவான அதிகூடிய ஓட்டங்களைக் கொண்ட இணைப்பாட்டமாகும்.
அத்துடன் கடைசி இன்னிங்ஸில் 4ஆவது விக்கெட் வீழ்ந்த பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் 385 ஓட்டங்களைக் குவித்தது.
இது டெஸ்ட் போட்டி ஒன்றில் நான்காவது இன்னிங்ஸில் 4ஆவது விக்கெட் வீழ்ந்த பின்னர் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகும்.
இதற்கு முன்னர் இங்கிலாந்துக்கு எதிராக 1973இல் 4ஆவது விக்கெட் வீழ்ந்த பின்னர் நியூஸிலாந்தினால் பெறப்பட்ட 310 ஓட்டங்களே கடைசி இன்னிங்ஸில் பெறப்பட்ட முந்தைய சாதனையாகும்.
மேற்கிந்தியத் தீவுகளின் இரண்டாவது இன்னிங்ஸில் கெமர் ரோச் 233 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள் உட்பட 53 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.