இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள சுற்றுலா மாநிலமான கோவாவில் உள்ள ஒரு இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 23 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் 4 பேர் சுற்றுலாப் பயணிகள் என தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று நள்ளிரவில் ஆர்போரா பகுதியில் இச்சம்பவம் நடந்ததாக, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் இன்று (7) அதிகாலை தமது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்று கோவாவில் உள்ள நம் அனைவருக்கும் மிகவும் வேதனையான நாள். ஆர்போராவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து 23 பேரின் உயிரைப் பறித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
தீ விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட பின்னர், இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக சாவந்த் தெரிவித்துள்ளார்.
“தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்தும், தீயணைப்பு பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் கட்டிட விதிகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் இந்த விசாரணை மூலம் ஆய்வு செய்யப்படும் என்று அவர் கூறினார்.
இதற்குப் பொறுப்பானவர்களுக்கு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பிரபலமான சுற்றுலாத் தலமான கோவா, இந்தியாவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது.
நேற்று ஏற்பட்ட தீ விபத்து சிலிண்டர் வெடிப்பால் ஏற்பட்டதாகவும், உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் விடுதியின் சமையலறை ஊழியர்கள் என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.