வொஷிங்டன் டிசி கென்னடி நிலையத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (05) உத்தியோகபூர்வமாக நடைபெற்ற பீபா உலகக் கிண்ணம் 2026க்கான பகிரங்க குலுக்கலின்போது பங்குபற்றவுள்ள அணிகள் எந்தெந்த குழுக்களில் இடம்பெறும் என்பது தீர்மானிக்கப்பட்டது.
ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப், ஜனாதிபதி குளோடியா ஷெய்ன்போம், பிரதமர் மார்க் கார்னி ஆகிய மூவரும் பீபா உலகக் கிண்ணம் 2026ஐ முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடுகளின் தலைவர்கள் என்ற வகையில் பகிரங்க குலுக்கலின்போது பிரசன்னமாகி இருந்தனர்.
பகிரங்க குலுக்கலின் பிரகாரம் பிறேஸில் – மொரோக்கோ, நெதர்லாந்து – ஜப்பான் ஆகிய போட்டிகளும் 2002 உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் பிரான்ஸை அதிர்ச்சியில் ஆழ்த்திய செனகல் ஆகிய அணிகளுக்கு இடையிலான மீள் போட்டியும் பீபா உலகக் கிண்ணம் 2026இல் அமையவுள்ள முக்கிய போட்டிகளில் சிலவாகும்.
2010 உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் மோதிய மெக்சிக்கோ – தென் ஆபிரிக்கா ஆகிய அதே அணிகள் மெக்சிகோ சிட்டி விளையாட்டரங்கில் ஜூன் 11ஆம் திகதி நடைபெறவுள்ள பிபா உலகக் கிண்ணம் 2026 ஆரம்பப் போட்டியிலும் மோதவுள்ளன.
இதேவேளை, ஸ்பெய்ன், ஜேர்மனி, ஆர்ஜன்டீனா, போர்த்துக்கல் ஆகிய பலம்வாய்ந்த அணிகளை முதல் தடவையாக உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ள முறையே கபோ வேர்டே, கியூரக்காஓ. ஜோர்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகள் எதிர்த்தாடவுள்ளன.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு வரவேற்பு நாடுகளான மெக்சிகோ ஏ குழுவிலும் கனடா பி குழுவிலும் ஐக்கிய அமெரிக்கா டி குழுவிலும் முதல் அணிகளாக நிரல்படுத்தப்பட்டன.