தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கைக்கான அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நேற்று திங்கட்கிழமை (08) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் இரு தரப்பினரும் இங்கு பல கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன.
புயலால் ஏற்பட்ட பேரழிவு காரணமாக தொழில் முயற்சிகள் அழிந்து போனமை, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளமை, பல உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் அவற்றின் அழிவு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது உயர்ஸ்தானிகரிடம் விளக்கமளித்துள்ளார்.
உட்கட்டமைப்பு வசதிகளை மீளமைத்து, மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்குத் தேவையான உதவிகளை பெற்றுத் தருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த இக்கட்டான காலத்தில் அவுஸ்திரேலியா இலங்கைக்கு பெற்றுத் தந்த உதவிகள் மற்றும் நிவாரண சேவைகளுக்காக அனைத்து இலங்கையர்களின் சார்பாகவும் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் அவுஸ்திரேலிய மக்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.