கனடாவின் பிரதமர் மார்க் கார்னி இன்று வியாழக்கிழமை கூட்டணி நாடுகளின் தலைவர்களைச் சந்திப்பதற்காக நோர்வே மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
நோர்வேயில் இருக்கும் போது, இந்த வார இறுதியில் அவர் ஆர்க்டிக் வட்டத்திற்கு அப்பால் வடக்கு பகுதிக்கு சென்று, நேட்டோ அமைப்பின் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மிகப்பெரிய “கோல்ட் ரெஸ்பான்ஸ்” (Cold Response) இராணுவப் பயிற்சியை நேரில் பார்வையிட உள்ளார். அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மத்திய கிழக்கு போர் உள்ளிட்ட அதிகரித்துள்ள சர்வதேச பதற்றங்களின் பின்னணியில் இந்தப் பயிற்சி நடைபெறுகிறது.
இந்த இராணுவப் பயிற்சிக்கு பிரதமருடன் நோர்வே பிரதமரும் ஜெர்மனியின் சான்சலரும் இணைந்து பங்கேற்க உள்ளனர்.
கனடாவுக்கு புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை விற்க ஜெர்மனியின் TKMS நிறுவனத்துக்கான முன்மொழிவை இரு நாடுகளும் ஆதரித்து வருகின்றன. எனினும், பல பில்லியன் டொலர் மதிப்புள்ள அந்தத் திட்டம் இந்த சந்திப்பின் நிகழ்ச்சி நிரலில் இல்லை என்று மூத்த அரசு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.
TKMS நிறுவனமும், போட்டியில் உள்ள தென் கொரியாவின் Hanwha Ocean நிறுவனமும் தங்களது முன்மொழிவுகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளன. இதற்கான முடிவு விரைவில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தின் போது கார்னி, டென்மார்க், ஸ்வீடன், ஃபின்லாந்து மற்றும் ஐஸ்லாந்து உள்ளிட்ட வட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.
நார்வே அரசு இதை “நார்டிக் உச்சிமாநாடு” எனக் குறிப்பிடுகிறது. டாவோஸ் (சுவிட்சர்லாந்து) மாநாட்டில் நடுத்தர சக்தி நாடுகள் ஒன்றோடொன்று நெருக்கமாக ஒத்துழைக்க வேண்டும் என்று கார்னி கூறியிருந்த கருத்தை நேரில் மேலும் விரிவாக விளக்க அவருக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்.
இந்த பயணம் இறுதியில் ஐக்கிய இராச்சியத்தில் முடிவடையும். அங்கு கார்னி, லண்டனில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லமான நம்பர் 10 டவுனிங் ஸ்ட்ரீட்டில் பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மரை சந்திக்க உள்ளார். அமெரிக்கா–ஈரான் மோதலும் அதனால் உருவான எண்ணெய் நெருக்கடியும் இந்த சந்திப்பின் முக்கிய விவாதப் பொருளாக இருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.